
10 மாதம் கட்டைக்கூத்து பயிற்சி 2025-2026
கருத்தாய்வு
வணக்கம்!
கட்டைக்கூத்து சங்கத்தின் வாழ்த்துக்கள்!
நீங்கள் நிகழ்த்து கலைகளில் ஆர்வமுள்ளவரா? நீங்கள் ஒரு நடிகரா, இசைக்கலைஞரா, நடனக்கலைஞரா, நாடகத்தின் வேர்களை ஆராய்வதில் ஆர்வமுள்ளவரா? அல்லது, ஏதேனும் கலைகளில் முந்தைய அனுபவம் உள்ளவரா? அப்படியானால் இந்தியாவின் தொன்மையான பாரம்பரிய கூத்து வடிவங்களில் ஒன்றான கட்டைக்கூத்தில் [தெருக்கூத்தில் ] பயிற்சி பெற உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
கட்டைக்கூத்து சங்கம் ஒரு டிப்ளமோ படிப்பை அக்டோபர் 2025 முதல் வழங்க திட்டமிட்டுள்ளது. கட்டைக்கூத்தில் இந்த அடிப்படை பயிற்சி உங்களை ஒரு தொழில்முறை கட்டைக்கூத்து குழுவில் கலைஞராக மாறவும் அல்லது ஒரு சமகால நாடகக்கலைஞராக , திரைப்பட நடிகராக அல்லது இயக்குநராக நீங்கள் மேலும் தொடர ஊக்கம் அளிக்கும்.
கட்டைக்கூத்து
கட்டைக்கூத்து என்பது தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட இயல், இசை நாடகம் என்ற முப்பரிமாணங்களையுடைய ஒர் பாரம்பரிய நிகழ்த்துக் கலையாகும். இரவு முழுவதும் நடைபெறும் இதன் நிகழ்ச்சிகள், மகாபாரதம், ராமாயணம் மற்றும் புராணங்களை அடிப்படையாகக்கொண்டது. இக்கதைகளை இசை பாடல் வசனம் நடிப்பு ஒப்பனை என பல வகையினில் மிகைப்படுத்தி ஒருங்கே நடத்தும் கலை வடிவம். இவ்வடிவத்தில் நடிகரே ஒப்பனை செய்தும், ஆடி, பாடி, பேசியும் கதைகளை மக்களிடம் கொண்டுசேர்ப் பது ஓர் முக்கிய அம்சம் ஆகும்.
கட்டைக்கூத்து பயிற்சி
கட்டைக்கூத்து டிப்ளமோ படிப்பு 10 மாத காலம், குரு திரு பெருங்கட்டூர் பொ. ராஜகோபால் மற்றும் அவரது திறமையான நடிப்பு மற்றும் இசை ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் பயிற்சி பெறுவீர்கள். இப்பயிற்சியில் கட்டைக்கூத்தின் அம்சங்களை கற்பதோடு, இதனுள் இரண்டு முழு இரவு கூத்துகள் மற்றும் ஒரு குறுகிய கூத்தும் அரங்கேற்றப்படும்.
பாட, பேச மற்றும் நடிக்க கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், கட்டைக்கூத்தின் இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றான ஹார்மோனியம், மிருதங்கம்/டோலக் மற்றும் முகவீனை (ஒரு சிறிய ஓபோ போன்ற காற்று வாத்தியம்) பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பாடநெறிக்கான முக்கிய பயிற்றுவிப்பு மொழி தமிழ். நீங்கள் தமிழில் சரளமாக இல்லாவிட்டாலோ அல்லது தமிழ் தெரியாதபோதும், நீங்கள் பயிற்சியில் பங்கேற்று பயில நாங்கள் உங்களை ஊக்குவிப்போம் .
இப்பயிற்சியில் 15 முதல் 20 பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கின்றோம் [வயது 18க்கு மேல்]. ஏதேனும் கலைகளில் முந்தைய அனுபவம் இருப்பின் மகிழ்ச்சி, ஆனால் அது கட்டாயமில்லை. நீங்கள் கிராமப்புற தமிழ் சூழலில், ஒரு குழுவில் சக மாணவர்களுடன் சேர்ந்து பயில்பவராக இருத்தல் அவசியம் .
கட்டைக்கூத்து நடைமுறைகளை அறிந்துகொள்வதோடு கூடுதலாக அதன் சமூக, பொருளாதார மற்றும் சடங்கு அம்சங்களைப் பற்றி மேலும் கண்டறிய வாய்ப்பு உள்ளது. 10 மாத பயிற்சி முடிந்ததும் ஒரு சான்றிதழைப் பெறுவீர்கள்.